

நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் பாதிப்பு ஏற்படாமலும் தடையின்றி நெல் கொள்முதல் செய்ய வசதியாகவும் தற்காலிகப் பந்தல்கள் அமைத்திடவும் ஈரமான நெல்லை உலர்த்தும் இயந்திரங்கள் வைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று தமிழக முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''காவிரி டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்கள் மூலம் ஏப்ரல், மே மாதங்களில் பயிரிட்டிருந்த முன் குறுவை அறுவடை முழுவீச்சில் தொடங்கிவிட்டது. எனவே, தாமதமின்றி நெல் கொள்முதல் பணிகளை முடிக்க வசதியாக மேலும் அதிக அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டுகிறோம். தற்போது வரை மிகக் குறைந்த அளவே கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை உடனடியாகத் தமிழக அரசு அமலாக்க வேண்டும். மேலும், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களில் வழங்கப்படுவது போல் ஊக்கத் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டுகிறோம். டி.கே.எம் 9 ரக நெல்லை விவசாயிகளிடம் முழுமையாகக் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொள்முதல் செய்யப்படும் இந்த வகை நெல்லை, இந்திய உணவுக் கழகம் மூலம் கேரளா உள்ளிட்ட தேவைப்படும் இதர மாநிலங்களுக்கு அனுப்பலாம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறைந்த செலவில் தற்காலிகப் பந்தல்கள் அமைக்க வேண்டுகிறோம். இதனால் மழைக் காலத்தில் கொள்முதலைத் தடையின்றிச் செய்ய முடியும். மேலும், நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்களையும் நிறுவி மழைக் காலத்தில் விவசாயிகள் பெரும் நஷ்டமடையாமல் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ஆறுபாதி கல்யாணம் தெரிவித்துள்ளார்.