

கரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் திரும்பி வரா ததால், தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
கடந்த காலத்தில் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஓசூர், ஈரோடு மற்றும் சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் மட்டுமே வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் தள்ளு வண்டி கடைகள், பேக்கரிகள், பழக் கடைகள், குவாரிகள், தனியார் நூற்பாலைகள், கட்டுமானத் தொழி ல்கள் என அனைத்து துறைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணிபு ரிகின்றனர். மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள், மேம்பாலப் பணிகளில் வேலை செய்ய 270 தொழிலாளர்கள் குடும்பத்தோடு தங்கி இருந்தனர். கரோனா தொற்று பரவியதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இன்னும் அவர்கள் திரும்பி வர வில்லை.
அதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் உள்ளூர் தொழிலா ளர்களைக் கொண்டு கடந்த ஒரு மாதமாக ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொண்டாலும் பணிகள் முன்பு போல நடக்கவில்லை. தமிழகம் முழுவதும் இதே நிலை நீடிக்கிறது. இதனால் பணிகளை டெண்டர் எடுத்த நிறுவனங்கள் கலக்கம் அடைந்துள்ளன. கரோனா பரவல் எப்போது முடிவுக்கு வரும் என தெரியாத நிலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது திரும்பி வர வாய்ப்பில்லை. அதனால் ஸ்மார்ட் சிட்டி பணிகளும் திட் டமிட்ட காலத்துக்குள் நிறைவ டைய வாய்ப்பு இல்லை.
தொழிலாளர்கள் அழைத்து வரப்படுவார்களா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் மதுரை மாநகர் புதுப்பொலிவு பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. அதுபோல், ஸ்மார்ட் சிட்டி மாதிரி வடிவம் மக்களிடம் வரவேற்பை பெற்றது. ஆனால், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக நகரில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு, போக்குவரத்து மாற்றி விடப்பட்டதோடு பணிகள் விரைவாக நடக்காமல் இருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களை திரும்ப அழைத்து வந்து ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.