

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சிறுவாணி அணை மற்றும் நொய்யலைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறும்போது, "நொய்யல்ஆற்று நீர் நேற்று முன்தினம் இரவு சித்திரைச்சாவடி தடுப்பணையைக் கடந்தது. சித்திரைச்சாவடி தடுப்பணையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் 9 குளங்கள் பயன்பெறுகின்றன. தற்போது புதுக்குளம், கொளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி குளங்களுக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
மற்றொருபுறம், மாதம்பட்டி அருகேயுள்ள தடுப்பணையிலிருந்து குனியமுத்தூர் வாய்க்கால் மூலம் கங்கநாராயணசமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம், செங்குளம் ஆகிய நீர்நிலைகளுக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.
குறிச்சி குளத்தில் ஏற்கெனவே தண்ணீர் உள்ள நிலையில், அதன் எஞ்சியுள்ள கொள்ளளவை நிரப்பும் நோக்கில் அந்த குளத்துக்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சேத்துமா வாய்க்கால் மூலம் உக்கடம் பெரிய குளத்துக்கும் தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. வெள்ளலூர் குளத்துக்கு மதியம் முதல் தண்ணீர் செல்கிறது" என்றனர். கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கோவை குற்றாலத்துக்குச் செல்லும் வழியில் மரங்கள் விழுந்துள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.