Published : 05 Aug 2020 07:36 AM
Last Updated : 05 Aug 2020 07:36 AM

திமுக தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம் பாஜக தலைவர் நட்டாவுடன் சந்திப்பு: மூத்த நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவரும், கட்சியின் தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம் எம்எல்ஏ நேற்று டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். இது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைமை நிலையச் செயலாளரும், திமுக எம்எல்ஏவுமான கு.க.செல்வம் நேற்று முன்தினம் இரவு தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் டெல்லி சென்றார். அங்கு பாஜக தேசியப் பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ் வீட்டில் நேற்று காலை சிற்றுண்டி அருந்திய அவர், மாலை 6 மணி அளவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது முரளிதர ராவ், எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கு.க.செல்வம் கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். எனது ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கிகள் அமைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைப்பதற்காக டெல்லி வந்தேன். அப்போது பாஜக தலைவர் நட்டாவையும் சந்தித்தேன். ராமேசுவரத்தில் உள்ள அனைத்து கோயில் பகுதியையும் அயோத்தி போல மாற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழ்க் கடவுள்
முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். திமுக உள்கட்சித் தேர்தலை ஸ்டாலின் நடத்த வேண்டும்.

இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நாட்டுக்கு எதிராக செயல்பட்டுவரும் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் உடனான உறவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். நான் பாஜகவில் இணைய
வில்லை. தொகுதி சம்பந்தமான கோரிக்கையை வலியுறுத்தவே பாஜக தலைவரை சந்தித்தேன். என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால், அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு கு.க.செல்வம் கூறினார்.

சமீபத்தில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த ராதாரவி ஆகியோர்தான் கு.க.செல்வம் பாஜக தலைவர்களை சந்தித்ததன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சித் தலைமைக்கு நெருக்கமான எம்எல்ஏ ஒருவர் மாற்றுக் கட்சிக்கு ஆதரவாக திரும்பியதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கு.க.செல்வம் டெல்லி சென்ற தகவல் அறிந்ததும் கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். கு.க.செல்வம் போல வேறு யார் யார் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறித்தும், இதுபோல மற்ற யாரும் செல்லாமல் தடுப்பது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜக தங்களை சீண்டுவதால், அக்கட்சியில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டு வருவது குறித்தும் திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பும்.. எதிர்பாராத சந்திப்பும்

கு.க.செல்வம், சென்னையின் இதயப் பகுதியான ஆயிரம்விளக்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனவர். அதிமுகவில் இருந்த கு.க.செல்வம் 1997-ல் திமுகவில் இணைந்தார். பிறகு ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், திமுக தலைமை நிலையச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதியை தோற்கடித்தார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவால் காலியான சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என்று கு.க.செல்வம் எதிர்பார்த்தார். ஆனால், கடைசி நேரத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான சிற்றரசுவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் கடந்த 2 வாரங்களாக திமுக நிகழ்வுகள் அனைத்தையும் புறக்கணித்து வந்தார். திமுக அலுவலகத்துக்கும் அவர் வரவில்லை. ஆனாலும், மூத்த நிர்வாகிகள் உட்பட திமுகவினர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், அவர் திடீரென டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்திருப்பது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x