

தமிழக அரசின் உதவியைப் பெற்று புதிதாக தொழில் தொடங்கியுள்ள இளைஞர் கார்த்திகேயன் ஷண்முகம் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திகேயன் ஷண்முகம் கூறியதாவது: பொறியியல் பட்டதாரியான நான் விரிவான முறையில் தொழில் தொடங்கும் கனவுடன் இருந்தேன். ஆனால், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்ற தெளிவில்லாமல் இருந்தேன். இந்நிலையில், தமிழக முதல்வர் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஒரு சிறப்பு அரசாணையை வெளியிட்டார். அதில் தனி மனித பாதுகாப்பு உபகரணங்களின் (PPE-KIT) உற்பத்தியை பெருக்க தகுதியான இளைஞர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதை அறிந்தேன்.
இது எனது தொழில்முனைவு கனவை நனவாக்கும் விதமாக இருந்ததால் அதற்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த மூன்றே நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், தண்டரை கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்பேட்டையில் மனை ஒதுக்கீடு கிடைத்தது. அதில் தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது நான் ஒரு தொழிற்சாலையின் உரிமையாளனாக திகழ்கிறேன். இதற்கு தமிழக முதல்வரும், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தொடர்ச்சியான ஊக்குவிப்புமே காரணம். இதற்காக நமது அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.