

மீன்வளத் துறையை தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையாக பெயர் மாற்ற வேண்டும், மீனவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கு.பாரதி கூறியதாவது:
மீனவர் நலவாரியத்தில் 3ஆண்டுகளாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், விபத்து, இறப்பு உட்பட பல்வேறு இக்கட்டான சூழல்களில் மீனவர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற பலமுறைஅதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சாரங்கபாணி, மாவட்டசெயலாளர் செங்கழனி, ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி சமூக இடைவெளியுடன் ஈடுபட்டனர்.
பொன்னேரி அருகே பழவேற்காடில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பாரம்பரிய மீனவ சங்க பொதுச்செயலாளர் மகேந்திரன் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.