Published : 05 Aug 2020 07:18 AM
Last Updated : 05 Aug 2020 07:18 AM

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

டெங்கு காய்ச்சல் வராமல்தடுக்க, வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் துப்புரவுமேற்பார்வையாளர்கள் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்றுநடைபெற்றது. கூட்டத்தில்,கரோனா வைரஸ் தடுப்பு மற்றும்டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துஎடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கோ.பிரகாஷ் கூறியதாவது:

325 டன் கழிவுகள்

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவது 9 சதவீதமாக குறைந்துள்ளது. இனிவரும் காலங்களிலும்குறையும் என்று எதிர்பார்க்கிறோம். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் குப்பைசேகரிக்கப்பட்டு பாதுகாப்பாகஅப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 325 டன்னுக்குமேல் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

டெங்குவும் கரோனாவைப் போன்றுதான். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் சென்னையை பாதுகாப்பான நகரமாக உருவாக்க முடியும். வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டி, மொட்டை மாடிகளில் உள்ள தேங்காய் மட்டை, காலிமனைகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கரோனா காலக்கட்டம் என்பதால் பாதுகாப்பு கருதி மாநகராட்சி ஊழியர்களால் வீட்டுக்குள் சென்று பார்க்க முடியாது. எனவே, அவரவர் வீடுகளைதூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

சென்னையைப் பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம்பேருக்கு இ-பாஸ் கொடுத்துள்ளோம்.

சட்டப்படி நடவடிக்கை

இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் துக்க நிகழ்ச்சி, மருத்துவ தேவை உள்ளிட்டவற்றுக்கு மட்டுமின்றி பணி சார்ந்த விஷயங்களுக்குச் செல்லவும் இ-பாஸ்வழங்கும் வகையில் எளிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் இடைத் தரகர்களை அணுக வேண்டாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x