

முடக்குவாத நோய்கள் கொண்ட ஈரோட்டை சேர்ந்த கர்பிணி பெண்ணுக்கு அப்போலோ மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை காரணமாக பாதுகாப்பான பிரசவம் நடந்து ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாயின் ரத்தத்தில் உள்ள கூறுகளின் காரணமாக ரத்த உறைவு ஏற்பட்டு கரு கலையுமாறு செய்யும் நோயும், இதய அடைப்பை ஏற்படுத்தும் தோல் அழி என்னும் நோயும் சியாமளாவுக்கு இருந்ததால் குழந்தையை உயிருடன் காப்பாற்றுவது சவாலாக இருந்துள்ளது.
கர்ப காலத்தின் ஏழாவது வாரத்திலிருந்து அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர்கள் கொண்டம்மாள் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சிகிச்சைப் பெற்று வரும் சியாமளாவுக்கு கடந்த மாதம் 20-ம் தேதி 3.1 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நோய்களுக்கு அளித்த சிகிச்சை குறித்த அப்போலோ மருத்துவமனையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது மகப்பேறு மருத்துவர் கொண்டம்மாள் கூறியதாவது:
சியாமளாவுக்கு உள்ள நோயின் காரணமாக ஏற்கெனவே ஒரு குழந்தை கருவிலேயே இறந்துள்ளது. பிரைமரி ஆண்டிபாஸ்போலிபிட் ஆண்டிபாடி சிண்ட்ரோம் என்ற முடக்குவாத நோய் கொண்டிருந்த சியாமளாவுக்கு ரத்தக் கட்டு ஏற்பட்டால் அது குழந்தைக்கான ரத்த போக்கை நிறுத்தி விடும். அதன் மூலம் குழந்தை இறக்க நேரிடும்.
எனவே, இரண்டாவது குழந்தை கருவுற்ற பிறகு சியாமளாவுக்கு ரத்தக் கட்டு ஏற்படாமல் இருக்க ரத்த மெலிவூட்டிகள் மற்றும் நோய் எதிர்ப்பு புரதம் ஆகியவை பிரசவத்துக்கு 12 மணி நேரத்துக்கு முன்பு வரை தொடர்ந்து அளித்து வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மருத்துவர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறும்போது, "கருவுற்ற காலத்தில் 12வது, 15வது, 18வது, 21வது மற்றும் 24வது வாரத்தில் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். 36வது வாரத்துக்கு மேல் ஆபத்து ஏற்படலாம் என்று கருதி அப்போதே பிரசவ அறுவை சிகிச்சை செய்து விட்டோம். இந்நோய் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கரு அழிதலுக்கான வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.