

திருவாடானை அருகே கரோனோவால் இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அச்சங்குடியில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது.
மதுரை தனியார் மருத்துவமனையில் கரோனோ சிகிச்சை பலனின்றி இறந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 55 வயது ஆணின் உடலை ஏற்றிக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைப்பட்டினம் சென்று கொண்டிருந்தது.
ஆம்புலன்ஸை தேனி மாவட்டம் அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பராஜா ஓட்டி வந்தார். அப்போது திருவாடானை அச்சங்குடி அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் அந்த ஓட்டுநருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. ஆம்புலன்ஸூக்குள் கரோனோ தொற்றால் இறந்தவரின் உடல் இருந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் யாரும் ஆம்புலன்ஸ் அருகில் செல்லவில்லை.
அதனையடுத்து திருவாடானை பகுதியில் தமுமுக செயலாளர் ஜிப்ரி மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு உடை அணிந்து வந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸில் இருந்த உடலை மீட்டு வேறு ஆம்புலன்ஸில் கோட்டைப்பட்டினம் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து திருவாடானை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.