வாணியம்பாடியில் திருட்டுப் போன விநாயகர் கோயில் கோபுரக் கலசம் பாலாற்றில் மீட்பு

விநாயகர் கோயில் கோபுரக் கலசத்தை கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்த காவல் துறையினர்.
விநாயகர் கோயில் கோபுரக் கலசத்தை கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்த காவல் துறையினர்.
Updated on
1 min read

வாணியம்பாடியில் பழமை வாய்ந்த விநாயகர் கோயிலில் திருட்டுப் போன கோபுரக் கலசம் பாலாற்றில் இருந்து இன்று மீட்கப்பட்டு, கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நகராட்சி, பேரூராட்சிகளில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள கோயில்களைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி அம்பூர்பேட்டை சுந்தர விநாயகர் கோயிலைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அன்று காலை கோயிலைத் திறந்து தூய்மைப்படுத்த கோயில் ஊழியர்கள் வந்தபோது, கோயில் கோபுரத்தின் மீது இருந்த கலசம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பழமை வாய்ந்த விநாயகர் கோயில் கோபுரக் கலசம் திருட்டுப் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயில் கோபுரக் கலசம் திருட்டில் தொடர்புடையவர்களைப் பிடிக்க டவுன் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பாலாற்றுப் பகுதியில் கோபுரக் கலசம் இருப்பதாக பொதுமக்கள் இன்று (ஆக.4) டவுன் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி பாலகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது விநாயகர் கோயிலில் திருட்டுப் போன கலசம் பாலாற்றில் வீசப்பட்டுக் கிடந்தது. அதைக் காவல்துறையினர் மீட்டனர். பிறகு, கோயில் நிர்வாகத்தினரைக் காவல் நிலையம் வரவழைத்து அவர்களிடம் கலசத்தைக் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கலசத்தைத் திருடி பாலாற்றில் வீசியது யாரென விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in