Published : 04 Aug 2020 06:00 PM
Last Updated : 04 Aug 2020 06:00 PM

பருமழையால் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கும் அபாயம்: மாநகராட்சி விரைவுப்படுத்துமா?

மதுரை

பருவமழை தொடங்கிவிட்டதால் வைகை ஆற்றில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

மதுரையையும், வைகை ஆற்றையும் பிரித்துக் பார்க்க முடியாது.

மதுரை மாநகர் உருவானதும், வளர்ச்சியடைந்ததும் வைகை ஆற்றின் ஆதாரத்தை கொண்டே என்பதே வரலாற்று உண்மை. ஆண்டு முழுவதும் இரு கரைகளையும் தொட்டப்படி ஓடிய வைகை ஆறு தற்போது உயிரோட்டம், நீரோட்டமில்லாமல் மாசுடைந்துள்ளது. அதிலிருந்து மீட்டெடுக்கவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.84 கோடியில் வைகை ஆற்றை கலாச்சார மையமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

வைகை ஆற்றின் சராசரி அகலம் 240 மீ. ஆற்றின் இரு புறங்களிலும் 20மீ. இடைவெளி விட்டு, இதில் 6 மீட்டர் அகலம் நடைபாதையாகவும், மீதமுள்ள பகுதி இருவழிப்போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆற்றின் இரு புறமும் ராஜா மில் பகுதியில் இருந்து குருவிக்காரன் சாலை 3.1 கி.மீ., வரை சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதுபோல், மக்கள் ஆற்றின் அழகை கண்டு ரசிக்க இரு புறமும் நடைபாதைகளும் அமைக்கப்படுகிறது. இரு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. கரோனா ஊரடங்கால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது தொடங்கி நடந்தாலும் மெதுவாகவே நடக்கிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமும் தொடங்க உள்ளது. இந்த மழையால் வைகை ஆற்றில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. அப்போது, ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால், வைகை ஆற்றில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டிப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மழை பெய்தாலும் தற்போது முன்பி போல் வைகை ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது ஆற்றின் மையப்பகுதியில் மட்டுமே வரும். வைகை அணையில் தண்ணீர் திறந்துவிட்டாலே ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி வரும். தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை. தற்போதுதான் ஸ்மார்ட் சிட்டிபணிகள் தொடங்கியுள்ளோம். பெரியார் பஸ்நிலையம் பணிகள் முடிந்ததும், கூடுதல் தொழிலாளர்களைக் கொண்டு வைகை ஆற்றுப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x