வீட்டு அஸ்திவாரத்தில் தோட்டம்; பேரூராட்சி அதிகாரியை வியக்க வைத்த ஜானகிராமன்!

வீட்டு அஸ்திவாரத்தில் தோட்டம்; பேரூராட்சி அதிகாரியை வியக்க வைத்த ஜானகிராமன்!
Updated on
1 min read

சிலர் தங்கள் வீட்டின் முன்பாகவோ, பின்பாகவோ தோட்டம் அமைப்பார்கள், வேறு சிலரோ மாடியில் தோட்டம் அமைப்பார்கள். ஆனால், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் ஒருவர் வீடு கட்டப் போட்டுள்ள அஸ்திவாரத்திலேயே தோட்டம் அமைத்து கவனம் ஈர்த்துள்ளார்.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், 'ஆடிப் பட்டம் தேடி விதை - எங்கள் வீட்டுத் தோட்டம்' என்று ஒரு பரிசுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார் பேரூராட்சி செயல் அலுவலர் குகன். இந்தப் போட்டியில் ஆடி மாதத்தில் தரையில் வீட்டுத் தோட்டம் அல்லது மாடியில் மாடித்தோட்டம் அமைத்தால் பேரூராட்சி சார்பில் அதனைப் பார்வையிட்டு பரிசு வழங்கப்படுகிறது. அத்துடன் தோட்டத்துக்குத் தேவையான இயற்கை உரம் இலவசமாக வழங்கப்படும். கூடவே, தாங்களே இயற்கை உரம் தயாரித்துக் கொள்ள உதவியாக ஒரு கிட்டும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளில் காய்கனித் தோட்டம் அமைத்து, பேரூராட்சியிடம் பரிசு பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை செயல் அலுவலர் குகனுக்கு அலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதை ஏற்று ஜானகிராமன் என்பவரின் வீட்டுக்குச் சென்றவர் ஆச்சரியத்தில் அசந்து போனார்.

காரணம், அங்கு வீடே கட்டப்படவில்லை. வீடு கட்ட அஸ்திவாரம் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி அங்கு தோட்டமெல்லாம் எதுவும் இல்லை. ஆனாலும் மனதுக்குள் ஏதோ தோன்ற அந்த அஸ்திவாரத்தை உற்றுப் பார்த்தவர் ஆச்சரியப்பட்டார். அஸ்திவாரத்தில்தான் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. “என்னங்கய்யா... இப்படி செஞ்சுருக்கீங்க?” என்று குகன் கேட்ட கேள்விக்கு ஜானகிராமன் அளித்த பதில் வித்தியாசமானது.

"மாடித்தோட்டம் அமைக்கத்தான் எனக்கும் ஆசை. ஆனால், வீடு அஸ்திவாரம் போட்டதோடு நிக்குது. மகன் வெளிநாட்டுல இருக்கான். அவன் அனுப்பிய பணத்தை வைத்து அஸ்திவாரம் போட்டாச்சு. மேற்கொண்டு கட்ட வங்கியில் கடன் கேட்டிருக்கோம். அது எப்ப வர்றது... மாடித் தோட்டம் எப்ப அமைக்கறது? அதற்குள்ளாக நீங்க அறிவிச்சிருக்கிற பரிசுத் திட்டம் முடிஞ்சுருமே, அதனால்தான் அடித்தளத்தையே தோட்டமாக்கிட்டேன்" என்று சொல்லி இருக்கிறார் ஜானகிராமன்.

ஜானகிராமன் தன் வீட்டுக்கான கட்டுமான மனையில் முள்ளங்கி, வெண்டை, கீரை, கொத்தவரை ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார். அவரின் விவசாய ஆர்வத்தைப் பாராட்டிய குகன், அவருக்குச் சால்வை அணிவித்து உரம் தயாரிக்கும் சாதனம் ஒன்றையும் பரிசளித்தார். “அடுத்த ஆடிப்பட்டம் வருவதற்குள் வீட்டைக் கட்டி முடித்து நிச்சயம் மாடித்தோட்டம் அமைப்பீர்கள் ஐயா” என ஜானகிராமனுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார் செயல் அலுவலர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in