

கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சையில் தெரியாமல் நேரிடும் சிறு தவறுகளையும் திருத்திக் கொள்ளவே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று (ஆக.4) ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"திருச்சி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கென அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கரோனா பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் மொத்தம் 4,339 படுக்கைகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி கரோனா தொற்றுடன் 1,218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் நோய்த் தொற்றுக்குச் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, நோய்த் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் 28 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேறு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு, அவர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானால் அது கரோனா உயிரிழப்பு பட்டியலில்தான் சேர்க்கப்படுகிறது. எனவேதான், கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. நோயைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், கவனமாக இருக்க வேண்டும். அறிகுறி வந்தவுடனேயே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர வேண்டும்.
தமிழ்நாட்டில் மொத்தம் 120 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில், 75 சதவீதப் பரிசோதனைகள் அரசு மருத்துவமனை ஆய்வகங்களிலும், 25 சதவீதம் தனியார் பரிசோதனை ஆய்வகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஆய்வகங்கள் உட்பட அனைத்து ஆய்வகங்களிலும் தரப் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தவறு செய்யும் ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாள்தோறும் 60 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா உயிரிழப்புகளை அரசு ஒருபோதும் மறைக்கவில்லை. அனைவரும் முகக்கவசம் அணிந்து, கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் கரோனா பரவாமல் தடுக்க முடியும். பனியன் துணியால் ஆன முகக்கவசம் அணியக்கூடாது.
அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதால் வரும் நாட்களில் கரோனாவால் நேரிடும் இறப்பு விகிதம் குறையும்.
சித்த, ஆயுர்வேதத் துறைகளில் கூடுதல் பணியாளர்களை பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனாவுக்கு நேரடி மருந்து, தடுப்பூசி இல்லாத நிலையில், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றில் தெரியாமல் நேரிடும் தவறுகளைத் திருத்திக் கொள்ளவே ஆய்வு நடத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை களையும் வகையில் தமிழ்நாட்டில் விரைவில் 150 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன" என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மருத்துவமனை முதல்வர் கே.வனிதா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் லட்சுமி, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், நகர் நல அலுவலர் எம்.யாழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.