Last Updated : 04 Aug, 2020 03:57 PM

 

Published : 04 Aug 2020 03:57 PM
Last Updated : 04 Aug 2020 03:57 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மட்டக்கடை அய்யலு சந்து கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் 2-ம் கேட், இந்திராநகர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் நேற்று வரை 80 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 7,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினமும் 2,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் 2,700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது இன்னும் 2 அல்லது 3 நாட்களில் 3,000 மாதிரிகளாக அதிகரிக்கப்படும்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தினமும் 2,300 முதல் 2,400 மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும், திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தின் மூலம் தினமும் 500 மாதிரிகள் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் ஒரே நாளில் கிடைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மேலும், காய்ச்சல் முகாம்களும் அதிகம் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் 15 சதவீதமாக இருந்த பாதிப்பு, தற்போது 9.5 சதவீதமாக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தினமும் 65 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பிற நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைகளில் அனுதித்து சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

இதனால் இறப்பு வீதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் தூத்துக்குடியில் 2, கோவில்பட்டியில் 2, காயல்பட்டினத்தில் 1 என 5 தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 48 தனிமைப்படுத்தப்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 16 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

கரோனா கவனிப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிப்பதற்காக 1,300 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

இதில் 50 முதல் 60 சதவீத படுக்கைகளில் மட்டுமே தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 40 சதவீத படுக்கைகள் காலியாகவே உள்ளன.

கூடுதல் படுக்கைகள் தேவைப்பட்டாலும் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது 600 படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்ஸிஜன் குழாய் இணைப்பு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இது தயாராகிவிடும் என்றார் ஆட்சியர். ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் சேர்மகனி, நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார், சுகாதார அலுவலர்கள் ராஜசேகர், ராஜபாண்டி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x