

இலங்கை தாதா அங்கட லக்கா உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை பீளமேட்டில் இலங்கையைச் சேர்ந்த நிழல் உலக தாதா அங்கட லக்கா (36), கடந்த ஜூலை 3-ம் தேதி உயிரிழந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி ஐஜி சங்கர் இன்று (ஆக.4) கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அங்கட லக்கா உயிரிழந்தது தொடர்பாகவும், அவருக்குப் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஆதார் அட்டை எடுக்கப்பட்டது தொடர்பாகவும் தனித்தனியாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மாநகர காவல்துறையினரால் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி ராஜூ தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்தது அங்கட லக்கா தானா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். விசாரணைக்குப் பின்னரே இவ்வழக்கு தொடர்பாக மற்ற விவரங்கள் தெரியவரும்" என கூறினார்.