

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.4) வெளியிட்ட அறிக்கை:
"திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி பாசனபரப்பில் அமைந்துள்ள கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று சிறப்பு நிகழ்வாக நாளை (ஆக.5) முதல் ஆக.14-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 691.20 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.