வீட்டு வாடகை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் தலையீடு; வாடகைதாரர் தீக்குளித்து உயிரிழந்த விவகாரம்: காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

காவல் ஆய்வாளர் சாம் பென்சாம்.
காவல் ஆய்வாளர் சாம் பென்சாம்.
Updated on
1 min read

வீட்டு வாடகை தராத புகாரில் ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்து, பெயிண்டர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை தாமாக முன் வந்து வழக்காக எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணையம், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புழல் விநாயகபுரம் பாலவிநாயகர் கோயில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சீனிவாசன் (40) என்கிற பெயிண்டர் வாடகைக்குக் குடியிருந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருந்த இவரால் கடந்த 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை.

நான்கு மாதங்களாக வீட்டு வாடகை தரவில்லை என்றும் வாடகை கேட்கும் நேரங்களில் மது அருந்திவிட்டு திட்டுவதாகவும் வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரைப் பெற்று புழல் காவல் ஆய்வாளர் சாம் பென்சாம், சீனிவாசனிடம் விசாரணை செய்தார். இதில் மனைவி, குழந்தைகள் கண்முன்னே சீனிவாசனைத் தாக்கி, திட்டி காவல் ஆய்வாளர் பேசியதால் அவர் மனமுடைந்து தீக்குளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மருத்துவமனையில் தன்னை ஆய்வாளர் திட்டி, தாக்கியதால் தீக்குளித்ததாக சீனிவாசன் கூறிய காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், சைதாப்பேட்டை 9-வது அமர்வு குற்றவியல் நீதிபதி மோகனம்மாள், சீனிவாசனிடம் வாக்குமூலம் பெற்றார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், வாடகைத் தகராறில் தலையிட்டு சீனிவாசனின் தற்கொலைக்குக் காரணமான காவல் ஆய்வாளர் பென்சாமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் பத்திரிகை, ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் (suo-moto) தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இதில் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், வீட்டு வாடகை தொடர்பாக சிவில் விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஏன் தலையிட்டார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in