

கோயம்பேடு சந்தையைத் திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என விக்கிரமராஜா கூறியுள்ளார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா இன்று (ஆக.4) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"முழுமையான பாதுகாப்புடன் அரசு விதிகளை மீறாமல் கோயம்பேடு சந்தையை நடத்த உறுதியேற்கிறோம். கோயம்பேடு சந்தையைத் திறக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தரும் என எதிர்பார்க்கிறோம்.
திருமழிசை சந்தை மூடப்பட்டு விரைவில் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். கோயம்பேடு சந்தை மூடலால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்பேடு சந்தை திறப்பதற்கான காலதாமதத்திற்குக் காரணம் என்ன எனத் தெரியவில்லை.
வியாபாரிகளின் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. காலை முதல் மாலை வரை பசி, பட்டினியால் 'எங்களுக்கு உணவு கொடுங்கள், வேலை கொடுங்கள்' எனக் கேட்கின்றனர். அதனால்தான் போராட்டத்தை அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
வேலை நிறுத்தத்தில் பல லட்சம் வியாபாரிகள் கலந்துகொள்வார்கள். இது மட்டுமல்லாமல், தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்தப்படும். அனைத்துவிதக் கடைகளின் வியாபாரிகளும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்.
சாதாரண வியாபாரி, திருமழிசை சந்தைக்கு இரவு 8 மணிக்குச் சென்றால் மறுநாள் காலை 10 மணிக்குத் தான் வெளியே வரக்கூடிய நிலை உள்ளது. டன் கணக்கில் காய்கறிகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.