Published : 04 Aug 2020 01:48 PM
Last Updated : 04 Aug 2020 01:48 PM

இணையத்தில் மீன் விற்பனை; இயல்பு நிலை திரும்பினாலும் இதை விடமாட்டேன்: புகைப்படக் கலைஞர் உறுதி

கரோனா காலத்தில் தொழில் வாய்ப்புகளை இழந்த புகைப்படக் கலைஞர் ராஜேஷ்குமார், இணைய வழியில் மீன் வியாபாரத்தில் இறங்கி தானும் சம்பாதித்து இன்னும் சிலரைப் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜேஷ்குமார் புகைப்படக் கலைஞர். ஒரு காலத்தில், கல்யாணம், காதணி விழா என ஏகத்துக்கும் பிசியாக இருந்த இவரையும் கரோனா ஒரு கை பார்த்துவிட்டது. சுப நிகழ்ச்சிகள் அடியோடு தடைப்பட்டுக் கிடப்பதால் ராஜேஷ் குமாருக்குப் புகைப்படம் எடுத்துக் கொடுக்கும் வேலைகள் ஏதும் வாய்க்கவில்லை. அதற்காக அதையே சொல்லிச் சொல்லி அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல் கொஞ்சமே கொஞ்சம் மாற்றி யோசித்து மீன் வியாபாரத்தில் குதித்துவிட்டார்.

மற்றவர்களைப் போல் கடைவிரித்து வியாபாரம் செய்யாமல் ஆன்லைன் புக்கிங் மூலம் வீட்டுக்கே சென்று மீன்களைச் சப்ளை செய்கிறார் இவர். கரோனா காலத்தில், முன்பின் பரிச்சயமே இல்லாத இந்தத் தொழிலுக்குள் நுழைந்திருக்கும் இவர் இதன்மூலம் பத்துப் பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜேஷ்குமார், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் அதிகம் நடக்கும். கரோனாவால் அந்த முக்கிய சீசனை முற்றாக இழந்துவிட்டேன். ஆண்டுக்கு மொத்தம் 70 முகூர்த்தம்தான். அதில் இந்த சீசனிலேயே அதிக முகூர்த்த நாள்கள் வரும். பெரிய பட்ஜெட்டில் திருமண ஆர்டர்கள் புக் செய்திருந்த பலரும் இப்போது 50 பேரைக் கூப்பிட்டு நடத்தும் திருமணம்தானே என்பதால் பட்ஜெட்டை ரொம்பவே சுருக்கி விட்டார்கள். அதனால் எங்களுக்கான தொழில் வாய்ப்புகள் முற்றாக அற்றுப் போய்விட்டன.

கையில் இருக்கு சேமிப்பை வைத்து கரோனா காலம் முடியும் வரை ஓரளவுக்குப் பிரச்சினை ஏதும் இல்லாமல் குடும்பத்தை ஓட்டிவிட முடியும்தான். ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் உலகம் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றே தெரியவில்லை. அதற்காக அதுவரை கையில் இருக்கும் சேமிப்பைக் கரைத்துக் கொண்டிருக்க முடியாது. அதனால்தான் வருமானத்துக்கு வழி தேடி இந்த மீன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன்.

கரோனாவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த பலரும் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிளிலும் தெருத் தெருவாக மீன் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துவிட்டுத்தான் தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு மீன்களை டோர் டெலிவரி செய்யும் யோசனை வந்தது. உடனே களத்தில் இறங்கிவிட்டேன்

மீன் வெட்டுபவர் தொடங்கி, டோர் டெலிவரி செய்யும் மூவர், ஆன்லைனில் ஆர்டர் எடுப்பவர் எனப் பத்துப் பேருக்கு இப்போது நான் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் நேரடியாகக் கடற்கரைக்குப் போய் மீனவர்களிடம் மீன்களை ஏலம் எடுத்து, அதைத் துண்டு, துண்டாக வெட்டி விற்பனை செய்கிறோம்.

கரோனா குறித்த அச்சம் அனைவருக்குமே இருக்கும் என்பதால் நாங்கள் கையுறை, முகக்கவசம் சகிதம் முழுக்க பேக் செய்யப்பட்ட அமேசான் பார்சல் ஸ்டைலில் மீனை வீடுகளுக்குக் கொண்டுபோய் சேர்க்கிறோம். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக நான் புகைப்பட ஆர்டர் எடுத்த வாடிக்கையாளர்களே ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். அவர்களை இணைத்து வாட்ஸ் அப் குழுக்களைத் தொடங்கி இருக்கிறேன். அந்தக் குழுக்கள் மூலமாகவும் எங்களின் மீன் வியாபாரம் நடக்கிறது.

புகைப்படம் எடுப்பது நமது கைவசம் இருக்கும் கலை என்பதால், மீன் வாங்கச் செல்வதில் இருந்து, ஏலம் பிடிப்பது, மீனைத் துண்டு போடுவது வரைக்கும் போட்டோ எடுத்து அவற்றை உடனுக்குடன் வாட்ஸ் அப்பில் பதிவேற்றுவேன். அதைப் பார்த்துவிட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு எந்த வகை மீன் வேண்டும் என்று வாட்ஸ் அப் வழியாகவே ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.

அப்படி ஆர்டர் கொடுப்பவர்களின் வீடுகளுக்கு அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மீனைக் கொடுத்து விடுவோம். நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் இதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. கரோனா முடிவுக்கு வந்தாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்கு பெரிய பட்ஜெட் திருமணங்கள் ஏதும் நடக்காது. அதே சமயம் இனிமேல் ஒரே தொழிலைச் செய்தெல்லாம் காலம் தள்ளமுடியாது. இது கரோனா நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் பாடம். எனவே, இயல்பு நிலை திரும்பினாலும் மீன் வியாபாரத்தையும் விடாமல் செய்ய வேண்டும் என நான் முடிவெடுத்துவிட்டேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x