

திருச்சி மாநகராட்சித் தலைமையிடத்து சுகாதார ஆய்வாளர் கரோனாவால் உயிரிழந்தார்.
திருச்சி பீமநகரைச் சேர்ந்தவர் அப்துல் கனி (50). திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தில் தலைமையிடத்து சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள சுகாதாரப் பிரிவில் பிறப்பு - இறப்புச் சான்றிதழ் வழங்கும் பணிகளைக் கவனித்து வந்தார்.
ஏற்கெனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அப்துல் கனிக்கு, கடந்த வாரம் கரோனா அறிகுறி காணப்பட்டது.
இதையடுத்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஆக.4) காலை அப்துல் கனி உயிரிழந்தார்.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலகங்களில் பணியாற்றுவோரில் 15-க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதில், பெரும்பாலானோர் குணமடைந்து, மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டனர்.
இந்தநிலையில், அப்துல் கனி மூலம் மாநகராட்சி ஊழியர்களில் கரோனாவால் முதல் உயிரிழப்பு நேரிட்டுள்ளது, சக ஊழியர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.