Published : 04 Aug 2020 11:36 AM
Last Updated : 04 Aug 2020 11:36 AM

திருவண்ணாமலையில் ஆதரவற்ற முதியவருக்கு மூன்று சக்கர மிதிவண்டி உதவித்தொகை வழங்கல்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரியும் முதியவருக்கு 3 சக்கர மிதிவண்டி மற்றும் ரூ.ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்து வருகிறார். இவர், விபத்தில் சிக்கியதால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆய்வுக்கு சென்ற தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, முதியவரின் நிலையைக் கண்டு வேதனை அடைந்தார். பின்னர் அவர், முதியவரை அழைத்து விசாரித்தார். அதில், அவரது பெயர் பரசுராமன் (76) என்பதும், திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரிவித் துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால்கள் ஊனமாகி, எதிர்காலமே கேள்விக்குறியானதால் தி.மலைக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு புதிய ஊன்றுகோல் மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகிய வற்றை வழங்கிய ஆட்சியர் கந்தசாமி, இதர உதவிகளை விரைவில் செய்துத் தருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்படி, முதியவர் பரசுராமனுக்கு 3 சக்கர மிதிவண்டி, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் வருவாய்த் துறை மூலம் மாதம் ரூ.ஆயிரம் உதவித் தொகை பெறுவதற்கான அனுமதி ஆணை, பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்களை முதியவர் பரசுராமனுக்கு, அவரது இருப்பிடத்துக்கே சென்று ஆட்சியர் கந்தசாமி நேற்று காலை வழங்கினார்.

ஆட்சியருக்கு நன்றி

இதுகுறித்து பரசுராமன் கூறும்போது, “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிம்மதியை தேடி திருவண்ணாமலைக்கு வந்து விட்டேன். ஊன்றுகோல் உடைந்து விட்டதால், நான் சிரமப்பட்டு வருவதை 2 வாரங்களுக்கு முன்பு பார்த்த ஆட்சியர் அன்றைய தினமே எனக்கு புதிய ஊன்று கோல் வாங்கிக் கொடுத்து செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கினார். அப்போது அவர், இதர உதவிகளை விரைவாக செய்து கொடுப்பதாக கூறினார். அதன்படி, தற்போது உதவிகளை செய்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை காண்பித்து, அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த உதவிகளை செய்து கொடுத்த ஆட்சியர் கந்தசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x