

தேசிய எலும்பு, மூட்டு தினம் 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4-ம் தேதி (இன்று) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அன்றாடப் பழக்கவழக்க மாற்றங்களால் எலும்புகள், மூட்டு, முதுகுப் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவை அரசு மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு இயக்குநர் செ.வெற்றிவேல்செழியன் கூறியதாவது:
"முன்பெல்லாம் செய்யும் வேலையே உடற்பயிற்சியாக இருந்தது. பழக்கவழக்க மாற்றங்களால் இன்று உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இந்திய முறை கழிப்பறைகளைவிட தற்போது பெரும்பாலானோர் மேற்கத்திய கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். இந்திய முறையிலான கழிப்பறையில் உட்காரும்போது முட்டி மடங்கி, கால், பாதங்கள் வரை வளைகிறது. ஆனால், மேற்கத்திய கழிப்பறையில் 90 டிகிரி அளவு மட்டுமே கால்கள் வளைகின்றன.
இந்திய முறை கழிப்பறைகளைப் பயன்படுத்தும்போது கால்கள், இடுப்பு, முதுகு எலும்பு உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். மேற்கத்திய கழிப்பறைகளால் நமக்கு நன்மை ஏதும் இல்லை.
மேலும், கால்களை மடக்கி சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவதை கவுரவக் குறைச்சலாக பலர் கருதுகின்றனர். திருமணம் போன்ற விசேஷங்களில் நின்றுகொண்டே சாப்பிடும் முறை பரவலாகிவிட்டது. வீட்டில் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, வேலைக்குச் சென்ற பிறகு அங்கும் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்கின்றனர்.
குனிந்து நிமிராமல் உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால் மூட்டு, முதுகுத்தண்டு ஆகியவை பாதிப்படைகின்றன.
40 நிமிட நடைபயிற்சி
தினந்தோறும் நடைப்பயிற்சி இருந்தால்தான் தசைகள், எலும்புகள் வலுவடையும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
சூரிய ஒளியே படாமல் அறைக்குள்ளேயே இருப்பவர்களுக்கு 'வைட்டமின்-டி' குறைபாடு ஏற்பட்டு, எலும்பு அடர்த்தி குறையும். எலும்பு அடர்த்தி குறைவாக இருப்பவர்கள் சிறு விபத்தில் சிக்கினாலும் எலும்பு முறிவு ஏற்படுகிறது. அடர்த்தி குறைவான எலும்புகளை மீண்டும் சேர்ப்பது மருத்துவர்களுக்கு சவாலான பணியாக உள்ளது.
எதிரியாகும் உடல் பருமன்
உணவுப் பழக்க மாற்றத்தால் பலர் உடல் பருமனாகி அவதிப்படுகின்றனர். இதனால், முதுகுத்தண்டுவடம் கூடுதலான எடையைத் தாங்க வேண்டியுள்ளது. இடுப்பு வலி, முதுகு வலி உள்ளவர்கள் முதலில் தங்கள் எடையைக் குறைக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துவோர் 'ஷாக் அப்சர்வர்' சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து சரிசெய்துகொள்ள வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணி நேரம் கணினியைப் பார்த்துக்கொண்டு இருப்பவர்களுக்கு கழுத்து வலி ஏற்படுகிறது. இவர்கள், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடக்க வேண்டும்.
உடல் வலிமைக்கு விளையாட்டுகளும் ஒரு காரணியாகின்றன. எனவே, ஏதேனும் ஒரு விளையாட்டில் முறையாக இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். முதுகு தண்டுவடம், இடுப்புப் பகுதிகளை வலுப்படுத்த தினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது".
இவ்வாறு வெற்றிவேல்செழியன் கூறினார்.