புதிய கல்விக் கொள்கை: மாணவர்களின் வருங்கால நலன் சார்ந்த முடிவை தமிழக அரசு அறிவிக்கும்; ஜி.கே.வாசன் எதிர்பார்ப்பு

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

புதிய கல்விக் கொள்கை குறித்து, தமிழக அரசு மாணவர்கள் வருங்கால நலன் சார்ந்த முடிவை அறிவிக்கும் என, தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.4) வெளியிட்ட அறிக்கை:

"கல்வியாளர்கள், மாநில அரசு மற்றும் மக்கள் கருத்து அறிதலுக்குப் பின்பு புதிய தேசிய கல்வி வரைவு கொள்கைகளை வகுத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அக்கொள்கை அறிவிப்பில், அனைத்துப் பள்ளிகளிலும் நர்சரி படிப்பு, மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டி, உயர்நிலைப் படிப்பு வரை கட்டாய இலவச கல்வி, மேல்நிலைக் கல்வி பயில்வோரில் 80% பேருக்கு கல்வி உதவித் தொகை, ஆராய்ச்சி படிப்பை ஊக்குவித்தல் போன்ற பல நல்ல அம்சங்கள் உள்ளன.

அதே சமயம் அறிவிக்கப்பட்ட வரைவு கல்விக் கொள்கையில் உள்ள சில அம்சங்கள் பற்றி ஐயப்பாடுகளும் எழுப்பப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஆய்வு செய்யப்பட்டு, சாதக, பாதகங்களை அறியப்பட்டு முடிவு எடுக்கப்பட வேண்டியவை.

இந்த அம்சங்களின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த தமிழ்நாடு அரசு, ஒரு கல்வியாளர்கள் ஆய்வுக் குழுவை நியமித்துள்ளது. அக்குழு ஒவ்வொரு அம்சத்தையும் ஆழமாக ஆய்வு செய்து, முறையான பரிந்துரை அறிக்கையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வியாளர்களின் இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு நன்கு ஆய்வு செய்து, தமிழக மாணவர்கள் நலன், தமிழகத்தின் சீரான கல்வி வளர்ச்சி, நலிந்தோர் மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி உத்தரவாதம் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு ஒரு நிறைவான மாணவர்கள் வருங்கால நலன் சார்ந்த முடிவை அறிவிக்கும் என தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்பார்க்கிறது"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in