Published : 04 Aug 2020 08:16 am

Updated : 04 Aug 2020 08:16 am

 

Published : 04 Aug 2020 08:16 AM
Last Updated : 04 Aug 2020 08:16 AM

ஊரடங்குக்கு முன் யாசகம் தேடி அலைந்த இளைஞர் இன்று தினமும் தேநீர் விற்று 30 ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம்: பட்டதாரி இளைஞரின் நெகிழ்ச்சி பயணம்

madurai-youth

மதுரை

கரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பு ரயில் நிலையத்தில் யாசகம் செய்துவந்த இளைஞர், ஊரடங்கு ஆரம்பித்த சில நாட்களிலேயே யாசகம் பெற்று சேமித்த பணத்தைக் கொண்டு டீ விற்கும் தொழிலாளியாக மாறியதோடு, இன்று தினமும் 30 பேருக்கு உணவளித்து வருகிறார்.


விருதுநக மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் தமிழரசன் (22). பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்துள்ளார். படிப்பை முடித்தவுடன் வேலை கனவோடு சென்னை சென்றவருக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. வேலை தேடி சுற்றி வெறுத்துப் போன தமிழரசன் மதுரைக்கு வந்த நேரம் கரோனா ஊரடங்கு தொடங்கியது. அதன்பின் ஊர் ஊராக யாசகம் செய்து வந்த அவர், தற்போது சொந்தமாக சைக்கிளில் டீ விற்கும் தொழில் செய்கிறார்.

அதில் கிடைக்கும் வருவாயில் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் 30 பேருக்கு தினமும் அவரே சமைத்து இலவசமாக சாப்பாடும் வழங்கி வருகிறார். கடந்த 2 மாதமாக, தினமும் இந்த சேவையை விடாமல் தொடர்கிறார். அலங்காநல்லூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் தினமும் காலை, மாலையில் சைக்கிளில் டீ விற்கிறார்.

அதோடு காலை, மாலை, இரவு வேளைகளில் சாலையோர ஆதரவற்றோரை தேடிச் சென்று உணவு வழங்குகிறார்.

அவரிடம் பேசினோம்:

அலங்காநல்லூர் அருகே கல்லனை கிராமத்தில் வசிக்கிறேன். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து விட்டேன்.

தூத்துக்குடி தான் எனது சொந்த மாவட்டம். அருப்புக்கோட்டை ஆதரவற்றோர் இல்லத்தினர்தான் இதைத் தெரிவித்தனர். அவர்களது பராமரிப்பிலேயே, திண்டுக்கலில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் வரை படித்துள்ளேன். சென்னையில் நல்ல வேலை கிடைக்கும் என்றுதான் சென்றேன். ஆனால் குடும்ப பின்னணியை விசாரித்து அனைவரும் நிராகரித்தனர். பகலில் வேலை தேடுவது, இரவில் மெரினாவில் தூங்குவது என எத்தனை நாள்தான் சிரமப்படுவது.

மெரினா பீச்சில் எனது பேக்கை திருடிச் சென்றனர். அதில் எனது சான்றிதழ்கள் பறிபோயின. போலீஸில் புகார் செய்து எப்ஐஆர் பதிவு செய்தால்தான் மறுபடியும் சான்றிதழ்களை வாங்க முடியும். அது உடனடியாக நடக்கிற காரியம் இல்லை என்பதால் வயிற்று பசிக்காக சென்னையில் பல இடங்களில் யாசகம் செய்தேன்.

கரோனா ஊரடங்குக்கு 1 மாதத்துக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் வந்தேன். அங்கு போலீஸார் விரட்டியடித்தனர். பின்னர் வழிப் போக்கனாக ஊர் ஊராக சுற்றினேன். அப்படித்தான் அலங்காநல்லூர் வந்தேன். நான் யாசகம் பெற்று ரூ. 7 ஆயிரம் சேமித்து வைத்திருந்தேன்.

பின்னர், இனி யாசகம் பெறக் கூடாது என உறுதியாக முடிவெடுத்தேன். 5 ஆயிரம் முன்பணம் கொடுத்து, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தேன். பின்னர் வாடகை சைக்கிளில் ரூ. 2 ஆயிரம் முதலீட்டில் டீ விற்கும் தொழில் செய்தேன். தினமும் ரூ. 1,500-க்கு குறைவில்லாமல் வருமானம் கிடைக்கிறது.

ஆரம்ப நாட்களில் சைக்கிளில் டீ விற்கச் சென்றபோது, சாலையில் ஆதரவற்று இருப்பவர்களுக்கு நம்மை போல சிரமப்படுகிறார்களே என நினைத்து சாப்பிட பணம் தருவேன். பின்னர், எனக்கு உணவு சமைக்கும்போது கூடுதலாக சமைத்து பார்சல் கட்டிக் கொண்டுபோய், அதை அவர்களுக்கும் வழங்குவேன். தினமும் 30 பேருக்கு ஒரு வேளை உணவாவது கொடுக்கிறேன். ஏதோ பிறந்தோம், இருந்தோம் என வாழாமல், நாலு பேருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதால் மன நிறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


ஊரடங்குக்கு முன் யாசகம்ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம்இளைஞரின் நெகிழ்ச்சி பயணம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author