

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு எப்போதும் அனுமதிக்காது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதை வரவேற்று பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் வருமாறு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: முதல்வருக்கு நன்றி. மத்திய அரசின் ‘மொழிக்கொள்கை’ மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல்வேறு தவறுகளைக் கொண்டது. இதை சுட்டிக்காட்டி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதி
யுள்ளோம். இந்த அடிப்படையிலும் முதல்வர் பழனிசாமி தனது எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத்தான் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மும்மொழிக் கொள்கையை அரசு நிராகரிக்க கூறியுள்ள அனைத்து காரணங்களும் 3,5,8-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கும் பொருந்தும். 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற கொள்கை தொடரும் என்றும் மாநில அரசு அறிவிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
சமக தலைவர் சரத்குமார்: புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது எனவும், தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்வர்திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இறுதி வரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இது இருக்கவேண்டும்.