

108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அவசரகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களுக்கான கட்டுப்பாட்டு அறை, சென்னை தேனாம்பேட்டையில் டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில ஊழியர்கள் அச்சம் காரணமாக பணிக்குவர தயங்குகின்றனர்.
இதனால் குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்து வீட்டில் இருந்தபடியே அழைப்பை ஏற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில், சென்னையில் கரோனா வைரஸ் தொற்றுக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. 24 மணி நேரமும் சேவை பெறுவதற்கு 044-40067108 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் 108 கட்டுப்பாட்டு அறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஒரு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இணைப்பு கிடைப்பதில்லை
இதுதொடர்பாக பொதுமக்களிடம் கேட்டபோது, “அவசர தேவைக்கு 108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. மீண்டும் தொடர்பு கொண்டாலும் இணைப்பு கிடைப்பதில்லை. இணைப்பில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படியே இணைப்பு கிடைத்தாலும் ஆம்புலன்ஸ் விரைவாக வருவதில்லை. அதனால், வாடகை கார், ஆட்டோக்களை பிடித்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.