காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 1,134 மதுபாட்டில்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் வேடல் அருகே வந்த கார் ஒன்றை காஞ்சிபுரம் மதுவிலக்கு போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டனர். அப்போது அந்தக் காரில் 1,134 மதுபாட்டில்கள் இருந்தன. இவற்றை காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து கடத்திச் சென்று சென்னையில் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்த சென்னை, முகப்பேர் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம்(49), ராஜா(39) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, கார் மற்றும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். வேடல் பகுதியில் இருந்து அதிக மதுபாட்டில்களை வாங்கி இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
