சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே கணினிவழியாக பட்டா மாற்றி தருவதற்கான சோதனைமுறை தொடக்கம்: கிராம கணக்குகளை சரிபார்க்கும்படி வருவாய்த் துறை அறிவுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

பத்திரப்பதிவு முடிந்ததும் சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே கணினிவழி பட்டா மாறுதல் பெறும் வசதியை சோதனை அடிப்படையில்பதிவுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், பட்டா மாறுதல் விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள கிராம கணக்குகளையும் சரிபார்க்க வேண்டும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 575 சார்-பதிவாளர்அலுவலகங்கள் உள்ளன. இதில் நிலம் விற்பனை தொடர்பாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட பின், அந்தபத்திர அடிப்படையில் வருவாய்த் துறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் அவரைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று அதற்குப் பிறகு பட்டா மாறுதல் நடைபெறும்.

இதற்கான காலவிரயத்தை கருத்தில்கொண்டு, சில ஆண்டுகள் முன்பாக, பத்திரப்பதிவு முடிந்ததும் நிலத்தை வாங்கியவர் பெயரில் பட்டா மாறுதல் செய்வதற்கான விண்ணப்பத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம். அதேநேரம், நிலத்தின் உரிமை வேறு ஒருவருக்கு மாறிவிட்டதற்கான விவரத்தை கணினிவழியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கான வருவாய்த் துறை அலுவலர்களுக்கு சார்-பதிவாளர் அனுப்பி விடுவார்.

அதன்பின் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை நிலத்தை வாங்கியவர், கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதிலும், குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே நிலம் தொடர்பான வருவாய்த் துறை தகவல்கள் இருக்கும் என்பதால், சார்-பதிவாளரே கணினிவழி பட்டா மாறுதல்செய்துதரும் வகையில் நடைமுறையை மாற்ற பதிவுத் துறைமுடிவெடுத்தது. இதையடுத்து, சோதனை அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக வருவாய்த் துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வருவாய்த்துறையினரிடம் இருந்து அதிகாரத்தை பதிவுத் துறை பறிப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் ஒரே தந்தை பெயர், மகன் பெயரில் பலர் இருப்பது வழக்கமானதாகும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில்,போலி ஆவணங்களை அளித்து பட்டா மாறுதல் பெற்றுவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் பல நடைபெற்று, நீதிமன்றம் வரை வழக்கு சென்றுள்ளதாகவும், வழக்குகளில் பதிவுத் துறைக்கு எந்த பொறுப்பும் இருக்காது என்றும், வருவாய்த் துறையினரிடம் நிலம் தெடார்பான ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பதிலளிக்க வேண்டி வரும் என்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க செய்தி தொடர்பாளர் ஆர்.அருள்ராஜ் கூறியதாவது:

பொதுமக்கள் பட்டா மாறுதல் பெற அலைக்கழிக்கப்படக் கூடாதுஎன்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதைநாங்கள் வரவேற்கிறோம். கணினிபட்டா வரும் முன்னர் எஸ்ஆர்பிடிஎன்ற முறை இருந்தது. பத்திரப்பதிவு முடிந்ததும் அந்த விவரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டதும், கிராமக் கணக்குகளை சரிபார்த்து அதன் அடிப்படையில் பட்டா மாறுதல் வழங்கப்படும்.

தமிழ் நிலம் மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் கணினி மூலம் பட்டா கிடைக்கும். இதிலும்சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக ஒருவரது பட்டா எண்ணில்ஒரு ஏக்கர் 60 ஏர்ஸ் என்று சிட்டாநகல் பெற்றுக் கொண்டு, கணினிமையத்தில் நகல் எடுக்கும்போது அதில் 60 ஏர்ஸ் மட்டும் பதிவாகியிருப்பின், அவர் பெயரில் 1 ஏக்கர் 60 ஏர்ஸ் இருந்தாலும் 60 ஏர்ஸ் நிலத்தை மட்டுமே விற்க முடியும்.

இந்த குழப்பத்தை வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துதான் சரி செய்ய முடியும். பதிவாளரே ஆன்லைன் பட்டா மாற்ற முடியும் என்ற நடைமுறை வந்தாலும், இது போன்ற சிக்கல்கள் இருந்தால்மீண்டும் அவர் வருவாய்த் துறைக்குதான் வந்தாக வேண்டும். எனவே, கணினிப் பட்டா நகலுடன் கிராம நிர்வாக அலுவலர் வைத்துள்ள கிராம கணக்கு நகலையும் பத்திரப்பதிவின்போது சரிபார்க்க உத்தரவிட வேண்டும். அதன்பின், பத்திரப்பதிவு நிகழ்ந்தால் சிக்கல்கள் இருக்காது.

இவ்வாறு அருள்ராஜ் தெரி வித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in