ஆம்புலன்ஸ் வராததால் தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் செய்த மகன்: தேனி ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஆம்புலன்ஸ் வராததால் தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று தகனம் செய்த மகன்: தேனி ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
Updated on
2 min read

ஆம்புலன்ஸ் வராததால் கரோனா தொற்றால் இறந்த தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று மகன் தகனம் செய்த விவகாரம் குறித்து இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்த மனித உரிமை ஆணையம் இதுகுறித்து பதிலளிக்க தேனி ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட அழகுபிள்ளை தெருவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு கடந்த வாரம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு வயிற்றுப் போக்குக்கான சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். அதே வேளையில் அவருக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார். ஆனால், கடந்த ஜூலை 31-ம் தேதி அதிகாலை அப்பெண் உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் நகராட்சி சுகாதாரப்பிரிவுககுத் தெரிவிக்கப்பட்டது.

உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்த நிலையில் ஆம்புலன்ஸ் வருவதற்குள் அப்பெண் வசித்த தெருவாசிகள் இறந்தவரின் மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது. இதனால் இப்பகுதியில் கரோனா பரவும் என்று கூறி உடலை உடனே எடுத்துச் செல்லுமாறு அப்பெண்ணின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

இதனால், விரக்தியடைந்த அப்பெண்ணின் மகன் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்துவந்து இறந்த தாயின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்றார். கரோனா தொற்று பாதித்தவரின் உடல் பாதுகாப்பு இல்லாமல் தள்ளுவண்டியில் முக்கிய வீதிகள் வழியே எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் பரவியது.

தகவல் நகராட்சி நிர்வாகத்துக்கு எட்ட, இறந்த பெண்ணின் சடலத்தை பாதுகாப்பாக தகனம் செய்யத் தேவையான கவசப்பைகளுடன் ஆம்புலன்ஸ் வந்தது. பின்னர் சடலம் பாதுகாப்பாக தகனம் செய்யப்பட்டது.

இது குறித்த இந்தச் செய்தி இந்து தமிழ் நாளிதழில் வெளியானது. இந்து தமிழ் பத்திரிக்கைகளில் வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர், நகராட்சி நிர்வாக ஆணையர், சேப்பாக்கம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in