

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் கறவை மாடுகளுக்கு அம்மைநோய் பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் அல்லிநகரம், சொக்கநாதிருப்பு, மணல்மேடு, பெத்தானேந்தல், செல்லப்பனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகள், 3,750 எருமைகள் உள்ளன. இங்கு கறக்கப்படும் பால் அதிகளவில் காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது.
சமீப காலமாக திருப்புவனம் பகுதியில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நோய் பாதித்த மாடுகளின் உடல் முழுவதும் கொப்புளங்கள் காணப்படுகின்றன. உணவு உண்ண முடியாமல் தவிக்கின்றன. படுக்க முடியாமல் சிரமப்படுகின்றன. பால் சுரப்பும் குறைந்துள்ளது.
நோய் பரவி வருவதால் மாடுகளை மேய்சசலுக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அல்லிநகரம் விவசாயி மணி கூறியதாவது: நோய் பாதித்த மாடுகளை தனிமைப்படுத்த கால்நடை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். கன்றுகளும் பரவும் என்பதால், பால் குடிக்க முடியாமல் தவிக்கின்றன.
மருந்து செலுத்தினாலும் குணமாகவில்லை. இதனால் நோய் பாதித்த மாடுகளுக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்க முடியவில்லை.
மஞ்சள், வேப்பிலையை அரைத்து தடவியும், மஞ்சள் நீரால் குளிப்பாட்டியும் வருகிறோம். மேலும் 15 முதல் 20 நாட்கள் வரை தனிமைப்படுத்தினால் மட்டுமே நோய் குணமாகிறது. அதுவரை பால் சுரப்பு குறைகிறது, என்று கூறினார்.