Last Updated : 06 Mar, 2014 12:00 AM

 

Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

அதிமுக அணியில் இருந்து கம்யூனிஸ்ட்கள் விலகல்?- இன்று முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியேறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை கம்யூனிஸ்ட் கட்சிகள் வியாழக்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஏ.பி. பரதன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடந்த பிப்ரவரி 2-ம் தேதியும், பிரகாஷ் காரத் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பிப்ரவரி 3-ம் தேதியும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்புகளின் போது அ.தி.மு.க-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் கூட்டணி ஏற்பட்டிருப்பதை ஜெயலலிதா அறிவித்தார்.

அதன் பின்னர் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகளும் அ.தி.மு.க பிரதிநிதிகளை சந்தித்து தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 4 தொகுதிகளை கேட்ட நிலையில், தலா ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்த ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், மார்ச் 3-ம் தேதி பிரச்சாரத்தையும் தொடங்கினார். அ.தி.மு.க-வின் இத்தகைய அணுகுமுறை கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலமுறை போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் வியாழக்கிழமை (இன்று) ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார். இந்த நிலையில் கூட அ.தி.மு.க – கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு எட்டுவதற்கான சூழல் ஏற்படவில்லை. ஆக, புதன்கிழமை மாலை நிலவரப்படி அ.தி.மு.க அணியில் இனியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

அ.தி.மு.க அணியில் கவுரவமான அங்கீகாரம் கிடைக்காத நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துக்கு குந்தகம் ஏற்படாத வகையில் மாற்று முடிவுகளை எடுப்பது பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது சிந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீவிரமாக விவாதித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “அ.தி.மு.க-வுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டாக சேர்ந்து முடிவெடுப்பது என தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.

இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில நிர்வாகிகள் சந்தித்துப் பேசுவார்கள் என தெரிகிறது. அந்த சந்திப்பைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x