தமிழக முதல்வரின் தொகுதிக்கு காவிரி நீரை கொண்டு செல்வதால் மேட்டூர் பாசனப்பகுதி பாதிக்காது: உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை தகவல்

தமிழக முதல்வரின் தொகுதிக்கு காவிரி நீரை கொண்டு செல்வதால் மேட்டூர் பாசனப்பகுதி பாதிக்காது: உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை தகவல்
Updated on
1 min read

தமிழக முதல்வரின் தொகுதியான எடப்பாடிக்கு காவிரி உபரி நீரை கொண்டு செல்லும் திட்டத்தால் மேட்டூர் பாசன விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என உயர் நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவிரி விவசாயிகள் சங்கச் செயலர் பி.ஆர்.பாண்டியன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன. காவிரி வழக்கில் தமிழகத்துக்கு முதலில் 192 டிஎம்சி தண்ணீரும், பின்னர் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழங்கப்படும் காவிரி நீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத்திடம் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு எந்த அனுமதியும் பெறாமல் டெல்டா பாசனத்துக்கு வழங்கப்படும் காவிரி உபரி நீரை எடப்பாடிக்கு கொண்டுச் செல்லும் ரூ.565 கோடி மதிப்பிலான திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப்பணித்துறை 12.11.2019-ல் அரசாணை பிறப்பித்தது.

தமிழக முதல்வரின் சொந்த தொகுதிக்கு நன்மை செய்யும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உச்ச் நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்படவில்லை.

கரோனா தொற்று பரவி வரும் சூழலில் திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். திட்டத்தை நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக பொதுப்பணித் துறையின் சிறப்பு செயலர் பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், சேலம் மாவட்டத்தில் 4 தாலுக்கா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணும் விதமாக, மேட்டூர் அணையின் உபரி நீரான 0.555 டிஎம்சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்படுகிறது.

இதனால் மேட்டூர் பாசன விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறப்பட்டிருந்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in