

ராமேசுவரம் தீவில் வானில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தென்பட்டதை பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
ராமேசுவரம் தீவில் திங்கட்கிழமை காலையில் இருந்தே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டியது.
இந்நிலையில் முற்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும் திடீரென்று வானில் சூரியனைச் சுற்றி ஒரு விதமான ஒளி வட்டம் காணப்பட்டது. இதன் வெளிப்பகுதி இளம் பழுப்பு நிறத்திலும், உட்பகுதி சிவப்பு கலந்த பல வண்ணங்களிலும் இருந்தது.
திடீர் என்று வானத்தில் நிகழ்நத மாற்றத்தைக் கண்டு ராமேசுரம் தீவில் உள்ள பொதுமக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.
ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில் தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு தங்கள் செல்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இதுகுறித்து பாம்பனில் உள்ள வானிலை ஆய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது, "இந்த சூரிய ஒளிவட்ட நிகழ்வினை ஆங்கிலத்தில் sun halo (சன் ஹாலோ) என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள்.
வளிமண்டலத்தின் மேகங்களின் மீது இருபத்திரெண்டரை டிகிரி கோணத்தில் சூரிய ஒளி படும்போது இத்தகைய நிகழ்வு ஏற்படுகிறது. இயற்கையாகவே அவ்வப்பொழுது நிகழும் நிகழ்வினால் எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.