

தொடர் பொது முடக்கம் காரணமாக நெய்வேலி, ஈரோடு, கோவையைத் தொடர்ந்து மதுரை புத்தகக் காட்சியும் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மதுரையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்ட நிர்வாகமும், பபாசியும் இணைந்து நடத்துகிற இந்தப் புத்தகக் காட்சி தென் தமிழகத்திலேயே பிரம்மாண்டமானது. மாதத் தொடக்கத்திலேயே சுவர் விளம்பரங்கள், பேருந்து விளம்பரங்கள் என்று விழா ஏற்பாடுகள் தொடங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் தொடர்வதால் புத்தகக் காட்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கச் செயலாளர் ஆ.கோமதிநாயகத்திடம் கேட்டபோது, "பொது முடக்கம் காரணமாக விழாக்கள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடவும் தடையிருக்கிறது. இதன் காரணமாக ஏற்கெனவே நெய்வேலி, கோவை, ஈரோடு புத்தகத் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஓசூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் போன்ற ஊர்களில் நடைபெறும் சிறிய அளவிலான புத்தகக் காட்சிகளைக்கூட நடத்த முடியவில்லை.
வழக்கமாக ஆகஸ்ட் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று மதுரை புத்தகக் காட்சி தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கப்பட வேண்டும். ஆனால், 31-ம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால், எந்த ஏற்பாடுகளையும் செய்ய முடியவில்லை. வழக்கமாக புத்தகக் காட்சி நடைபெறும் மதுரை தமுக்கம் மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டும் வேலைகள் வேறு நடக்கின்றன. எனவே, இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெற வாய்ப்பில்லை" என்றார்.
கடந்த ஆண்டு 250 அரங்கங்களுடன் நடந்த 14-வது மதுரை புத்தகக் காட்சியில், சுமார் 4 கோடி ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்பனையாகின. தமிழகத்தில் தொடர்ந்து புத்தகக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதால், இதுவரையில் புத்தகக் காட்சி வாயிலாக மட்டும் விற்பனையாகியிருக்க வேண்டிய சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் தேங்கி நிற்கின்றன. புதிய நூல்களும் வெளியாகாமல் தடைப்பட்டிருக்கின்றன. வாசகர்களும் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.
இதற்கு என்ன மாதிரியான மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளீர்கள் என்று பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகத்திடம் கேட்டபோது, "சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிரந்தர புத்தகக் காட்சி இருப்பது போல, இணையத்திலும் பபாசி சார்பில் நிரந்தரமாக ஒரு புத்தகக் காட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். புத்தகக் காட்சியைப் போலவே இங்கும் ஒவ்வொரு பதிப்பாளருக்கும், விற்பனையாளருக்கும் ஒரு அரங்கு எண் ஒதுக்கப்படும். அதில் அவர்களது அனைத்துப் புத்தகங்கள் மற்றும் விலை விவரம் பட்டியலிடப்பட்டிருக்கும். வாசகர்கள் இணையம் வழியாகப் பணம் செலுத்தியும், சிஓடி (கேஷ் ஆன் டெலிவரி) முறையிலும் புத்தகம் வாங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருகிறோம். அதுவரையில் பதிப்பகங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும் எனில், ஏற்கெனவே நூலகங்களுக்கு சப்ளை செய்த புத்தகங்களுக்கான பில் தொகையை அரசு விடுவிக்க வேண்டும். புதிய ஆர்டர்கள் தர வேண்டும். அதேபோல பதிப்பாளர்கள் விற்பனையாளர்கள் நல வாரியத்தில் நாங்கள் செலுத்தி இருப்பில் உள்ள பணத்தில் இருந்து எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடமும், முதல்வரிடமும் வலியுறுத்தியுள்ளோம்" என்றார்.