கோப்புப்படம்
கோப்புப்படம்

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை அமைக்கவும், கரைக்கவும் தடை: கடலூர் ஆட்சியர் அறிவிப்பு

Published on

கடலூர் மாவட்டத்தில் விநாயகா் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை அமைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''கரோனா தொற்று உலகமெங்கிலும் பரவி வரும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்த் தொற்றை உலகளாவிய தொற்று நோயாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரையில் அமலில் உள்ளது.

இதனால், மாவட்டத்தில் அனைத்து சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றுக்கான தடையும் நீடிக்கிறது.

ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக பொது இடங்களில் வழிபாட்டுக்காக விநாயகர் சிலைகள் நிறுவுதல், வழிபடுதல் மற்றும் விநாயகர் சிலையைக் கரைத்தல் போன்றவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

நிகழாண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளதால் சிலை செய்பவர்கள் பொது இடங்களுக்கான விநாயகர் சிலைகளைச் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது''.

இவ்வாறு ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in