

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் புதிதாக 178 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாததால் தொற்று உறுதியாகி 66 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதனால் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோவிட் மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் கரோனா தொற்று தொடர்ந்து அதிவேகமாகப் பரவி வருகிறது. கரோனா தொற்று பாதித்துள்ளோர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன.
கரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் இன்று (ஆக.3) கேட்டதற்கு, "புதுச்சேரியில் நேற்று 782 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 178 (22.6 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 37 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 22 பேர் ஜிப்மரிலும், 9 பேர் காரைக்காலிலும், 42 பேர் ஏனாமிலும், 2 பேர் மாஹேவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 66 பேர் மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காகக் காத்திருப்பில் உள்ளனர்.
கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேர், ஜிப்மரில் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் பெண்கள். உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.4 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,982 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,411 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 256 பேர், ஏனாமில் 17 பேர் என 273 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை 41 ஆயிரத்து 540 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 36 ஆயிரத்து 894 பரிசோதனைகள் முடிவு 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 388 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன" என்று தெரிவித்தார்.
2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கோவிட் மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை
மருத்துவமனைகள் நிரம்பி வழிவது தொடர்பாகவும், பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை தொடர்பாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கேட்டதற்கு, "ரேபிட் டெஸ்ட் கருவி வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இன்று இரவோ, நாளை காலையிலோ ரேபிட் டெஸ்ட் கருவிகள் புதுச்சேரி வந்துவிடும். அதன்பிறகு அதிகபட்சக் கருவிகள் புதுவை மற்றும் ஏனாமுக்கு வழங்கப்படும். இதில் காரைக்கால், மாஹேவுக்கும் கொஞ்சம் கருவிகளை அனுப்ப உள்ளோம்.
புதுவையில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வாரம் முதல் தொற்று இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம் தினமும் 200 பேர் பாதிக்கப்படக்கூடும். எனவே, இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளை கோவிட் மருத்துவமனைகளாக மாற்றுவது நல்லது. இது தொடர்பாக முதல்வர் தலைமையில் கல்லூரி நிர்வாகிகளை அழைத்துப் பேசி 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கோவிட் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.