Last Updated : 08 Sep, 2015 02:42 PM

 

Published : 08 Sep 2015 02:42 PM
Last Updated : 08 Sep 2015 02:42 PM

உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் தாமதமாகும் பரிசோதனை நடைமுறை: நவீன முறை இல்லாததால் பிடிபடுவோர் தப்ப வாய்ப்பு

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனை நடைமுறையில் நவீன வசதிகளைக் கொண்டு வராததால், உணவில் கலப்படம் செய்வோர் வழக்கில் இருந்து எளிதில் தப்பிவிடுவதாகக் கூறப்படுகிறது.

உணவுப்பொருளில் கலப்படம், கெட்டுப் போன உணவுகள் விற்பனை, உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய சுவையூட்டிகள் அதிகம் பயன்படுத்துதல், காய்களை வேகமாக பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள், காய்கறிகளில் நச்சுத்தன்மை கொண்ட உரங்களின் அதிக பயன்பாடு உள்ளிட்டவை மனித குலத்தின் ஆரோக்கியமான வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டிய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை, பரிசோதனை விஷயத்தில் தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப நவீன முறையைக் கையாளாததால் உணவுப் பொருட்கள் தொடர்பான குற்றத்தில் ஈடுபடுபவர்களை ஒன்றுமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகரில் எதற்கும் பயன்படுத்த முடியாத அனைத்து சத்துக்களும் உறிஞ்சப்பட்ட, கழிவாகச் செல்ல வேண்டிய சக்கைப் பாலை லிட்டர் ரூ.10-க்கு பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், பால் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதும், அந்த பாலை வாங்கும் வியாபாரிகள் கெட்டித் தன்மைக்காக வேதிப் பொருட்களை கலக்கி விற்பனை செய்வது குறித்தும் ‘தி இந்து’ நாளிதழில் படங்களுடன் தொடர்ச்சியாக செய்திகள் பிரசுரமாயின.

சக்கைப் பாலை விற்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், தொடர்ந்து அந்த பால் விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதாக ‘தி இந்து’ வாசகர் வேதனை தெரிவித்துள்ளார்.

"சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து சக்கைப் பாலை கொண்டு வந்து அதே இடத்தில் வைத்து, பால் வியாபாரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கிலான லிட்டர்கள் விநியோகம் செய்கின்றனர். ரூ.10-க்கு விற்கப்படும் அந்த பாலை வாங்கிச் சென்று கலப்படப் பொருளை கலக்கி ரூ.40-க்கு விற்பது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்பது கண்கூடு. இருப்பினும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து சக்கைப் பால் விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகிறது" என்றார் அந்த வாசகர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம் கடந்த 2006-ம் ஆண்டில் நிறைவேறியது. இருப்பினும், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுதான் இது தனித்துறையாகக் கொண்டு வரப்பட்டது.

தற்போதுள்ள நடைமுறைப்படி சந்தேகிக்கப்படும் ஒரு உணவு மாதிரியை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தால், குறைந்தபட்சம் 14 நாட்களாவது காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால், கேரளம் போன்ற மாநிலங்களில் உணவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

பாலில் கலப்படம் என்றால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆய்வக வசதியை உள்ளிடக்கிய பரிசோதனை வாகனத்தை கூடவே கொண்டு சென்றுவிடுவார்கள். பாலின் மாதிரியை அதே இடத்தில் எடுத்து அதிகபட்சம் அரை மணி நேரத்தில் அங்கேயே வைத்து கலப்படம் உள்ளதா எனக் கண்டுபிடித்து வழக்கே போட்டுவிடலாம். ஆனால், தமிழகத்தில் நிலைமை அவ்வாறு இல்லை. உணவு மாதிரியை எடுத்துச் சென்று பரிசோதனைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு துரித உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தததை அடுத்து அங்கு சென்று பரிசோதனை நடத்தி, உணவு மாதிரியை சோதனைக்காக எடுத்து வந்தோம். ஆய்வகச் சோதனையில் கெட்டுப்போன உணவுதான் என்பது உறுதியானது.

நீதிமன்றத்தில் அந்த வழக்கு சென்றபோது ‘அது தங்களுடைய உணவகத்தில் எடுக்கப்பட்ட உணவு மாதிரி இல்லை’ என சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிறுவனத்தினர் மாற்றிக் கூறிவிட்டார்கள். உணவு மாதிரிகள் பரிசோதனை விஷயத்தில் ஆய்வக முடிவுகளை உடனுக்குடன் கிடைக்குமாறு நவீன ஆய்வுக்கூட வசதியுடன் வாகன வசதி இருந்தால் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் எளிதில் தப்பிவிட முடியாது. சக்கைப் பால் விஷயத்திலும் பரிசோதனைக்காக பாலை எடுத்துச் சென்று சோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x