Published : 03 Aug 2020 01:59 PM
Last Updated : 03 Aug 2020 01:59 PM

கோயம்பேடு காய்கனி அங்காடியைத் திறக்கக் கோரி வியாபாரிகள் சங்கம் ஆலோசனை

கோயம்பேடு காய்கனி அங்காடியை மூடி மாதக்கணக்கில் ஆகியும் அரசு திறக்காமல் உள்ளதாலும், திருமழிசை அங்காடியில் வசதி குறைவாக உள்ளதாலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நாளை ஆலோசனை நடத்த உள்ளனனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மற்றும் ஆந்திர எல்லை மாவட்ட விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தையாகவும், காய்கறி, பழம், மலர் சந்தையின் முக்கியச் சந்தையாகவும் கோயம்பேடு காய்கனி அங்காடி விளங்கியது. பல ஏக்கர் பரப்பளவில் மூன்று சந்தைகளும், அருகிலேயே வெளியூர் செல்லும் பேருந்து நிலையம், வாகனங்கள் நிறுத்த வசதி எனத் திகழும் பிரம்மாண்டமான கோயம்பேடு காய்கனி அங்காடி கரோனாவுக்குத் தப்பவில்லை.


தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் புழங்கும் இந்த அங்காடியின் உள்ளேயே பல ஆயிரம் தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இதற்காகத் தனி ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கரோன தொற்றின் ஆரம்பக் காலத்தில் சென்னையின் சிறிய ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டாலும் பல ஆயிரம்பேர் புழங்கும் கோயம்பேடு காய்கனி அங்காடி மூடப்படவில்லை.

காரணம் மாற்று ஏற்பாடு இல்லை. மாற்று ஏற்பாடு குறித்து பல வியாபாரிகள் சங்கத்தினர் அரசுக்கு ஆலோசனை வைத்தும் அது பரிசீலிக்கப்படவில்லை என்பது வியாபாரிகள் தரப்பு குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் திடீர் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் கூடியதால் அங்கிருந்த வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், பாதுகாப்புக்கு இருந்த போலீஸாருக்குத் தொற்று ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு காய்கனி அங்காடி மூடப்பட்டது.

கூலித் தொழிலாளர்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களைச் சேர்ந்தவர் என்பதால் அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றதால் தொற்று எண்ணிக்கை வட மாவட்டங்களில் வேகமாக அதிகரித்தது. பிரம்மாண்ட கோயம்பேடு சந்தைக்கு மாற்றாக மாதவரம் அருகே பழ மார்க்கெட், திருமழிசையில் காய்கறி மார்க்கெட்டும் அமைக்கப்பட்டது. இது வியாபாரிகளுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அங்கு யானைகளை மாட்டுக்கொட்டடியில் அடைத்ததுபோல் சிறிய அளவில் பழங்கள், காய்கறிகளைப் பாதுகாக்க வசதியில்லை. வாகனங்களை நிறுத்தவும் போதிய இடமில்லை. மழை பெய்தால் சேறும் சகதியுமாக குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர், கோயம்பேடு சந்தையைவிட கால்பங்குக்கும் குறைவான பகுதி, பொதுமக்கள் அதிகம் கூடுவதால் இடைவெளியில்லாமல் நோய்ப்பரவல் இங்கும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் பலமுறை எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக விக்கிரமராஜா தலைமையில் வியாபாரிகள், துணை முதல்வரும், துறை அமைச்சருமான ஓபிஎஸ்ஸைச் சந்தித்து மனு அளித்தனர். கோயம்பேடு சந்தையைச் சுத்தப்படுத்தி இடைவெளிவிட்டு வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அரசுத் தரப்பில் பதில் இல்லாததால் இறுதிக்கட்ட முடிவெடுக்க இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகின்றனர்.

இதுகுறித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பு:

''சென்னை கோயம்பேடு பெரியார் காய்கறி வணிக வளாகம், காமராஜர் மலர் அங்காடி, அண்ணா கனி அங்காடி, உணவு தானியம் மார்க்கெட் வணிக வளாகம், செமி ஹோல்சேல் மற்றும் சில்லறை வணிகர்களின் அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்ந்த ஒருங்கிணைப்புக் குழு, வணிக வளாகங்கள் மூடப்பட்ட நாளிலிருந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்றுவரை தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் இயங்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கோயம்பேடு மார்க்கெட் குறித்த பல்வேறு ஆலோசனைகளை துணை முதல்வரையும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் கார்த்திகேயனையும் பலமுறை நேரில் சந்தித்து தொடர் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்திருக்கிறோம். கடைசியாக துணை முதல்வர் தலைமைச் செயலாளரைச் சந்தித்தபோது வாய்மொழி வாக்குறுதியாக, விரைவில் கோயம்பேடு வணிக வளாகம் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்ற உறுதியைத் தெரிவித்தார்.

அது அன்றைய தினமே மாலை நேர நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் அரசின் செயல்பாடுகள் மிகுந்த மந்தமான நிலை இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கருதுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டைத் துரிதமாகத் திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று தியாகராய நகர், கண்ணதாசன் சிலை அருகில் உள்ள சங்கீதா ஓட்டலில் நிர்வாகிகள் நாளை காலை 11-00 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே, கோயம்பேடு வணிக வளாக கூட்டமைப்புச் சார்ந்த அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் அனைவரும் மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கோயம்பேடு வணிக வளாகம் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி முடிவெடுக்க உறுதுணையாக இருக்கும்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்று உரிய முடிவு எடுத்திட தங்களின் மேலான ஆலோசனையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x