விருதுநகரில் கரானோ நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு

விருதுநகரில் கரானோ நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு
Updated on
1 min read

கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் 154 படுக்கை வசதிகளுடன் விருதுநகர் அருகே தொடங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விருதுநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,500ஐ நெருங்கியுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அதிகம் காணப்படும் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்களும் தொடங்கப்பட்டு வருகின்றன. இம்மையங்களில் நோயாளிகளுக்கு கபரசு குடிநீர், மூலிகை கசாயம் உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுவதோடு யோகாசன பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. இச்சிகிச்சை முறைக்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அரசு மருத்துவமனைகள் தவிர 5 கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 1,250 படுக்கை வசதிகளுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள ஏஏஏ பொறியியல் கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனை சிறப்பு சிகிச்சைப் பிரிவு சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது.

இச்சிகிச்சை மையத்தில் 39 பெண்களும் 115 ஆண்களும் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சையோடு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து, மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் கூறுகையில், சென்னைக்கு அடுத்தபடியாக நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு வருகிறது.

அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஏஏஏ பொறியியல் கல்லூரியில் இயங்கும் சிறப்பு சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவசர சிகிச்சைக்காக தேவையான மருந்து, மாத்திரைகளுடன் அலோபதி மருத்துவரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in