ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

பொதுமக்கள் இணைந்து செயல்பட்டு கரோனாவை ஒழித்து முற்றுப்புள்ளி வைப்போம்; வாசன்

Published on

அரசு மற்றும் மருத்துவர்களுடைய செயல்பாடுகளோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட்டு கரோனாவை ஒழித்து முற்றுப்புள்ளி வைப்போம் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கை:

"உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தாக்கத்தால் பல்வேறு வளர்ந்த நாடுகள் கூட பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளன. உலக அளவில் கரோனா தொற்றின் தாக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகவும் மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

இந்தியா உலக மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தைக் கொண்டுள்ளது. தற்பொழுது இந்தியாவுடன் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனா தொற்றின் எண்ணிக்கை, சதவிகிதம் மிகக் குறைவு. அவற்றை வெகுவாக குறைக்கக்கூடிய நிலையில், மத்திய அரசு விரைந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியாலும் மருத்துவக் குழுவின் ஆலோசனையாலும் கோட்பாடுகளாலும் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களின் தொடர் பணியாலும் தொற்று அதிக அளவு பரவாமல் தடுக்கப்பட்டு இருக்கிறது.

அதோடு நோய்த் தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அதிக அளவு பரிசோதனை செய்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உயர்ந்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வந்தபொழுது தமிழக அரசும் சுகாதாரத்துறை, மாநகராட்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தொடர் முயற்சியாலும் புதுப்புது வியூகங்களாலும் கரோனா தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. அதிக அளவு பரிசோதனைகளாலும் உடனடி மருத்துவத்தாலும் தீவிரக் கண்காணிப்பாலும் பல்லாயிரக்கணக்கானோர் விரைவாக குணமடைந்துள்ளனர்.

ஆனால், தற்பொழுது சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. ஆகவே, சென்னையைப் போன்று புது வியூகங்களை தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் விரைந்து செயல்படுத்தி தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.

மேற்கொண்டு அரசு தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப எடுக்கும் கட்டுப்பாடுகளையும் கோட்பாடுகளையும் மருத்துவக் குழுவின் ஆலோசனைகளையும் தவறாது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் இதுவரை அளித்துள்ள ஆதரவையும் ஒத்துழைப்பையும் அனைவரும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in