

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான நிலத்தை நில உரிமையாளரான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கினார்.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதி சாலையோரத்தில் உள்ள ஒரு வயல்வெளிப் பகுதியில் அப்பகுதி மக்கள் சூலம் வைத்து நீண்ட காலமாக முனீஸ்வரன் வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்னர், இந்த இடத்தில் ஆனந்த விநாயகர், மரமுனீஸ்வரன், சமுத்திர துர்கை ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனியே கோயில்கள் கட்டியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த பசுபதி என்பவர் இக்கோயிலை நிர்வகித்து வருகிறார்.
காரைக்காலைச் சேர்ந்த தொழிலதிபர் சின்னத்தம்பி (எ) அப்துல் காதர் என்பவர் இந்த இடம் உள்ள பகுதியுடன் கூடிய நிலத்தை குடியிருப்பு மனைகளாக்கி விற்பனை செய்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். இந்நிலையில், அந்த இடத்தைக் கோயிலுக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் அப்துல் காதரிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து, அப்துல் காதர் தனக்குச் சொந்தமான இடத்தைக் கோயிலுக்குத் தானமாக வழங்கும் வகையில் கோயிலை நிர்வகித்து வரும் பசுபதி என்பவரிடம் நிலத்தை ஒப்படைக்க முன் வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஆக.2) மாலை கோயில் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலையில் அப்துல் காதர், இடத்துக்கான பத்திரத்தை பசுபதியிடம் வழங்கினார். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அப்துல் காதர் கூறுகையில், "இந்த நிலத்தை நான் வாங்கியபோது, சிறிய அளவில் வழிபாட்டுத் தலம் இருந்தது. பின்னர், எனது அனுமதியின்றி படிப்படியாகக் கோயில்கள் கட்டப்பட்டுவிட்டன. தற்போது கோயில்கள் அமைந்துள்ள 1,200 சதுர அடி மனையைக் கோயிலுக்கு அளிக்கும் வகையில் பசுபதி என்பவருக்கு இலவசமாக அளித்துவிட்டேன்.
மேலும், கோயிலுக்குப் பின் பகுதியில் உள்ள 3,000 சதுர அடி நிலத்தைக் கோயிலுக்கு ஏற்ற வகையில் பூங்கா அமைப்பதற்கென காரைக்கால் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன். மக்கள் வழிபாட்டுக்காகவும், மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலும் முழு மனதுடன் இதனைச் செய்துள்ளேன்" என்றார்.