Published : 03 Aug 2020 07:27 AM
Last Updated : 03 Aug 2020 07:27 AM

எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் தகனம்: அமைச்சர் ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி

எல்லையில் உயிரிழந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி(47). இவர் காஷ்மீரில் உள்ள கத்துவா மாவட்டம் ஹிரா நகரில் எல்லைப் பாதுகாப்பு படையில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த ஜூலை 25-ம் தேதி பணியில் இருந்தபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில், கண்ணில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். உதாம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் ராணுவ வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான புள்ளவராயன் குடிக்காடு கிராமத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு, அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், எஸ்.பி எம்.துரை, பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் வரதராஜன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், புள்ளவராயன் குடிக்காட்டிலுள்ள மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் திருமூர்த்திக்கு மனைவி தமிழரசி(44), மகள் அகல்யா(24), மகன் அகத்தியன்(22) ஆகியோர் உள்ளனர். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் ரூ.33 ஆயிரத்துக்கான காசோலையை திருமூர்த்தியின் குடும்பத்தினரிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x