திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.7.50 கோடி செலவில் தடுப்பணை கட்டுமான பணி: செப்டம்பரில் நிறைவு பெறும் என அதிகாரிகள் அறிவிப்பு

கூவம் ஆற்றில் புதுமாவிலங்கை - பிஞ்சிவாக்கம் இடையே ரூ.7.50 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை.
கூவம் ஆற்றில் புதுமாவிலங்கை - பிஞ்சிவாக்கம் இடையே ரூ.7.50 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை.
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் ரூ.7.50 கோடி செலவில் நடைபெற்று வரும் தடுப்பணை அமைக்கும் பணி வரும் செப்டம்பரில் முடிவுக்கு வரும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக் கம் அருகே கேசாவரம் பகுதியில் கல்லாற்றின் கிளை ஆறாக கூவம் ஆறு உருவாகிறது. இது பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், அரண் வாயல், பட்டாபிராம் வழியாக 72 கி.மீ. தூரம் ஓடி, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது.

இந்த ஆற்றில் கேசவபுரம், புட்லூர், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் உள்ளன. இவற்றில் ஜமீன் கொரட்டூர், அரண்வாயல் தடுப்பணைகள் சேத மடைந்துள்ளன.

இதனால், வீணாகும் மழைநீரை தடுக்கும் வகையில், கூவம் ஆற்றில் முக்கிய இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் விளைவாக, பொதுப்பணித் துறை சார்பில் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் புதுமாவிலங்கை-பிஞ்சிவாக் கம் இடையே தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கூவம் ஆற்றில் புதுமாவிலங்கை-பிஞ்சிவாக்கம் இடையே தடுப்பணை அமைக்கும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. ரூ.7.50 கோடி செலவில், 120 மீட்டர் நீளம், 2 மீட்டர் உயரம் கொண்ட தடுப்பணை, நவீன தானியங்கி இரும்பு மதகு வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது. தடுப்பணை பணிகள் 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 25 சதவீத பணிகளும் வரும் செப்டம்பரில் முடிக்கப்பட்டுவிடும்.

இந்த தடுப்பணை மூலம் மழைநீர் வீணாவது தடுக்கப்படுவதோடு, புது மாவிலங்கை, பிஞ்சிவாக்கம், சத்தரை, அகரம், கடம்பத்தூர் உள்ளிட்ட 20-க் கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in