

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (ஆக.3) ஆலோசனை நடக்க உள்ளது.
இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் துறை செயலர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
எதை ஏற்கலாம்?
மாநிலத்தின் மொழி, கலாச்சாரம் பாதிக்காதவாறு எந்தெந்த அம்சங்களை புதிய கல்விக் கொள்கையில் ஏற்கலாம், என்னென்ன திருத்தங்களை கோரலாம் என்பன குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.