நிலவில் சந்திரயானின் ‘லேண்டர்’ மோதி சிதறிய நிலையில் ‘ரோவர்’ வாகனம் சேதமின்றி இருக்க வாய்ப்பு: பொறியாளர் சண்முக சுப்ரமணியன் தகவல்

சந்திரயான்-2 ரோவர் வாகனத்தின் மாதிரி படம்.
சந்திரயான்-2 ரோவர் வாகனத்தின் மாதிரி படம்.
Updated on
1 min read

சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் கலன் சேதமடையாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019 ஜூலை 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, 2019 செப்டம்பர் 7-ம் தேதி
நிலவை நெருங்கிய நிலையில், சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன், நிலவில் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக தெரிகிறது.

இதையடுத்து, தொடர் முயற் சியில் லேண்டர் இருப்பிடத்தை இஸ்ரோ கண்டறிந்தாலும் அதை உறுதிசெய்வதில் சிரமங்கள் நீடித்தன. இந்த சூழலில் நிலவை சுற்றிவரும் நாசாவின் எல்ஆர்ஓ விண்கலம் எடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் உதவிகொண்டு, லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கில் 750 மீட்டர் தூரத்தில் உடைந்த பாகங்கள் தென்படுவதாக தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்ரமணியன் நாசாவுக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், லேண்டர் விழுந்த இடம் மற்றும் உடைந்த பாகங்களை ஆய்வின் மூலம் நாசா உறுதிசெய்தது.

இந்நிலையில், சந்திரயான் விண்கலத்தின் ரோவர் சேதமடையாமல் இருந்திருக்கக் கூடும் என்ற புதிய தகவலை பொறியாளர் சண்முக சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘நிலவில் லேண்டர் வேகமாக சென்று மோதியதில், அதில் இருந்த ரோவர் வெளியேறி சில மீட்டர்தூரம் தள்ளி விழுந்துள்ளது. வேகமாக மோதியதால் லேண்டரின் சில பாகங்கள் மட்டுமே உடைந்து சிதறியிருக்கும். அதேநேரம் ரோவர் கலன் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. கடந்த மே மாதம் நாசா வெளியிட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் கிடைத்தன. இதற்கு முன்பு கண்டறிந்த பாகங்களும் லேண்டரின் ஆய்வு சாதனங்களாகவே இருக்கக்கூடும். இதன் விவரங்களை இஸ்ரோ, நாசா மையங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சந்திரயான் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் கடந்த ஓராண்டாக நிலவை வெற்றிகரமாக சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த விஷயத்தில் நாசாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. எனினும், பொறியாளர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றுள்ளது. எங்கள் வல்லுநர் குழுவினர் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலவில் மோதிய பிறகும் லேண்டர், ரோவர் இடையே சில நாட்கள் வரை தகவல் தொடர்பு இருந்
திருப்பது முந்தைய ஆய்வில் தெரியவந்தது. எனினும், லேண்டரின் பாகங்கள் சேதமடைந்ததால் அதனால் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கலாம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in