

சென்னையில் அடுத்தடுத்து 20 பேரிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் முருகன் (30). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி இரவு வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்கியுள்ளார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், 3 பவுன் தங்க நகை, 1 செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலை இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முருகன், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஓட்டேரி விக்கி (19), கொடுங்கையூர் தினேஷ் (19) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 20 செல்போன்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்ட இருவரும் கொடுங்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து செல்போன்களைத் திருடியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.