

கரோனா ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டுள்ளதால், சென்னை பெரம்பூர் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) 75 சதவீத ஊழியர்களுடன் ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் தயாரிப்பதில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலை முக்கிய பங்கு வகிக்கிறது. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அதிநவீன ரயில் பெட்டி, சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில் பெட்டி உட்பட 50 வகைகளில் 600வடிவமைப்புகளில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பணிகள் பாதிப்பு
ஊரடங்கால் சில மாதங்களாகரயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. கடந்தமே மாதத்தில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவழைக்கப்பட்டு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. தற்போது, 75 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால், இனி வரும் நாட்களில் தினமும் 10 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.