வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை

வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்: திமுக எம்எல்ஏ கோரிக்கை
Updated on
1 min read

12 ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியில் இருக்கும் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில்திட்டப்பணியை விரைந்து முடிக்கவேண்டும் என்று திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கி.மீ தொலைவுக்கு பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு 1997-ம் ஆண்டு நிறைவடைந்தது. 2-வது கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877 கோடியே 59 லட்சம் செலவில் 2007-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களின் வசதிக்காக வேளச்சேரி - பரங்கிமலையை இணைக்கும், பறக்கும் ரயில் திட்டப்பணியை ரூ.495 கோடியில் கடந்த 2008-ம் ஆண்டு ரயில்வே தொடங்கியது.

மொத்தமுள்ள 5 கி.மீட்டரில் 4.5 கி.மீ. தொலைவுக்கு 167 தூண்களுடன் ரயில் பாதைகள் வேகமாக அமைக்கப்பட்டன. இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் பகுதியில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தற்போது, இந்தபிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்பட்டுள்ளதால், இனியும் இத்திட்டத்தை தாமதிக்காமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் நேற்று கூறியதாவது:

மெட்ரோ, பேருந்து, மின்சார ரயில் நிலையங்கள் இணைவதால், பரங்கிமலை முக்கியரயில் சந்திப்பாக உள்ளது. இதற்கிடையே 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் இணைப்பு திட்டப்பணிகளை விரைந்து முடித்தால், லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற முடியும்.

500 மீட்டர் தூரத்துக்கான நிலப்பிரச்சினைக்கும் நீதிமன்றம் மூலம்தற்போது சுமுகத் தீர்வு ஏற்பட்டுள்ளதால், தெற்கு ரயில்வே விரைவாகபணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in