மேடவாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

மேடவாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

மேடவாக்கம் பெரிய ஏரி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான மேடவாக்கம் பெரிய ஏரி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித் துறை இதை பராமரித்து வருகிறது. இந்த ஏரி நீரால் மேடவாக்கம், வடக்குபட்டு, வெள்ளக்கல், கோவிலம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள் பயன்பெற்று வந்தன. சென்னை புறநகரான மேடவாக்கத்தில் வேளாண் நிலங்கள் சுருங்கி விட்டன. ஏரியும் கவனிக்கப்படவில்லை.

இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. தற்போது இதன் பரப்பு 145ஏக்கராக சுருங்கியுள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்றுநாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய் பால்தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் ஜூலை 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

3 மாதங்களுக்குள் அறிக்கை

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஏரி வேளாண்பணிகளுக்கு பயன்படாவிட்டாலும், மிகப்பெரிய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாகவும், நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளையும் செய்கிறது. எனவே, மேடவாக்கம் ஏரியை ஆய்வு செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில், நீர்நிலைப் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் மாநகராட்சி உயரதிகாரி, பொதுப்பணித் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதைத் தடுக்க ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

மனு மீதான அடுத்த விசாரணை அக்டோபர் 12-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in