

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 50 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை அடைய ஒரு மாதகாலம் எடுத்துக்கொண்ட காலம் உண்டு. தற்போது இந்திய அளவில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
கரோனா தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. அமிதாப் பச்சன் தொடங்கி கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதேபோன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ராஜ்பவனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் நலம் பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தேன். அவர் விரைந்து குணமடைந்து, நல்ல உடல்நலனைப் பெற்றிட வேண்டும் என விரும்புகிறேன்.
மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.